ஈரம்
>> Monday, 28 May 2012
ஜன்னலை சாத்தியப்பிறகும் குளிர் உள்ளே பாயாமல் இல்லை. சிறுப்பிராயத்தில் மார்கழி மாதத்து இரவுகளில் போட்டுக் கொண்ட அப்பாவின் டெர்லின் சட்டை ஞாபகத்துக்கு வந்தது. கண்ணை இறுக மூடியும் தூக்கம் வரவில்லை. நூறு ஆடுகளை கண்ணுக்குள் வைத்து எண்ணியாகி விட்டது. கண் சொருகும் நேரத்தில் உடலே உலுக்கிப் போடுவது போல் நடுங்கிற்று. சரிவுகளில் தொடர்ந்து உடல் சறுக்கி விழும் ஒரு விசித்திரமான உணர்வு.
யமுனா பக்கமாய்த் திரும்பிப் பார்த்தாள். மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் ஸ்டெல்லா பெரிய கண்களை மொட்ட மொட்ட மலர்ந்து படுத்திருப்பது தெரிந்தது. ஆனாலும் யாரும் பேசிக் கொள்ளவில்லை. ஒரு நிமிஷம் ஸ்டெல்லா சிலிர்த்துப் போய் இவளது கைகளை இறுக்க பற்றிக் கொண்டாள். அவள் உள்ளங்கையில் ஏல வாசனை வீசுகிற மாதிரியிருந்தது. இரவு சாப்பிட்ட டீயும் பன்னும் தொண்டைக்குழியில் நின்றது. திடுமென ஸ்டெல்லா இவள் கைகளை இறுக பற்றிக் கொண்டாள். “ சங்கர்ட்ட சொன்னியா? “ என்றாள். “இல்ல…”என்னும் போதே இவள் குரலில் நடுக்கம் வந்தது. என்ன சொல்வான் சங்கர் என்று நினைக்கையில் உத்திரவாதமில்லாத ஒரு பயம் வந்தது. ”நீங்க எதுக்கு வேன் ஜன்னல மூடாத இருந்தீக? மூடிருந்தா அவன் கைய வுட்டிருப்பானா?” என்று சொல்லலாம். ”அதெல்லாம் ஒண்ணுமில்ல…” என்று சாதாரணமாக சொன்னால் கூட சாராயம் குடித்து விட்டு அப்படி பேச மாட்டான். “அப்பவே செத்திருக்கணும்டி. அசிங்கமால்ல”என்று கூட பேசுவான். “என்ன சொன்ன?”என்றாள் ஸ்டெல்லா. “கலவரமாருக்கு. ஸ்டெல்லா வீட்டுல தங்கிட்டு வர்றேன்னேன்” ஸ்டெல்லா மறுபடி அமைதியானாள். கம்பம்மேடு புதர் பக்கம் தான் இவளைப் பார்த்தாள். சட்டென்று சேலையை இரண்டாய்க் கிழித்து பாதியை இவள் மேல் போர்த்தினாள். வழிநெடுக இவள் வாந்தி எடுக்க எடுக்க கழுத்தைப் பின்பக்கமாய் ஆதரவாய் பிடித்தபடி வந்தாள். “என்ன செஞ்சானுவ?” “வாய்ல மூத்திரம் பெஞ்சானுக. தண்ணி கேப்பியளானு கேட்டானுக?” துண்டுத்துண்டாக பிளந்து விழுந்தன வார்த்தைகள். ஸ்டெல்லா அவள் முதுகை இறுக பிடித்துக் கொண்டாள்.ஜீப் கடந்தபடி இருந்தது. அவர்களின் மெளனத்துக்கிடையே ஜீப் டிரைவர் ஒருமுறை திரும்பிப் பார்த்த மாதிரி இருந்தது. இவள் ஜன்னல் பக்கமாய் முகத்தை திருப்பிய போது காற்றில் எங்கும் மூத்திர வாடை அடிப்பது போலிருக்க குமட்டிற்று. கண்ணை மூடினால் ஒற்றையடிப் பாதைகள். மலைச்சரிவு. எங்கும் இருட்டு. வரிசையாய் ஜீப்புகள். இவ்வளவு நாள் அண்ணன் தம்பியாய் பழகிய உறவுகளின் நிர்கதியான வார்த்தைகள்.ஸ்டீயரிங்கைப் பிடித்துக் கொண்டு சைலப்பன் “விட்டுருற சொல்லுங்கண்ணே” என்று கெஞ்சியதற்கு “எங்களால ஏதும் செய்ய முடியாது” என்று துரையண்ணன் சொல்வது கேட்டது. “நீ டீ போட்டா தாம் ஏகதேசத்துக்கு வாசனையே வருது”என்று சொன்ன துரையண்ணன் குரல் அந்த நிமிஷம் ஞாபகத்துக்கு வந்துப் போனது. சங்கரியின் மார்பின் மேல் விரைசலாய் ஒரு கை தடவி மறைந்தது. “எந்த பொறுக்கி நாய் அது?”என்று சங்கரி கத்தினாள். “வேணாம்க்கா..கத்தாதீக…பார்டரைக் கடந்திடுவோம்” என்றான் சைலப்பன்.சங்கரி குமறி பெரிய குரலெடுத்து அழுதாள். இருட்டைக் கிழிக்கத் தெம்பற்று அவளது அழுகை சத்தம் விசும்பலாய் மவுனித்தது. இவள் சங்கரியை தோளோடு சாய்த்துக் கொண்டாள். ப்ளீச்ச்ச்—பான்பராக் போட்டு துப்பின எச்சில் இவள் கன்னத்தில் விழுந்தது. தண்ணி வேணுமாம் …கொடுங்கடா என்று இரைந்தவன் ஜீப்பின் மேல் கம்பியால் அடித்தான். தகரம் மெல்ல முனங்கி வளைந்தது.சைலப்பனின் முதுகில் மூன்று நான் கு பேர் திமுதிமுவென அடித்தனர். சைலப்பன் ஸ்டியரிங்கில் குனிந்து படுத்தமாதிரி ஒடுங்கினான். அவனது வலது கை சாவியை மடக்கிப் பிடித்திருந்தது. அவர்கள் ஜன்னல் வழியே வெளியே போய் அடுத்த ஜீப்பை நோக்கிப் போனார்கள்.சைலப்பன் எந்திரிக்காமல் போக சங்கரி அவன் கன்னத்தைத் தட்டி “அண்ணே” என்றாள். கிறங்கின கண்ணோடு சைலப்பன் எழுந்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தது. ஒருகணம் அவன் சுதாரிப்பதற்குள் ஜீப்பை வலதும் இடதுமாய் ஆட்டினார்கள். யமுனாவுக்கு நெற்றி ஜீப்முனையில் இடித்து வீங்கிற்று. உள்ளே கை விட்டு எக்கி ஜீப் கதவைத் திறந்தது தெரிந்தது. “விடாதீங்க..கதவ பிடிங்க”என்று சைலப்பன் அலறினான்.அதற்குள்ளாக அவர்கள் இவளை வெளியே இழுத்தனர். சங்கரியை பிடரிமுடியைப் பிடித்து எட்டி உதைத்தார்கள்.அண்ணே என்ற கெஞ்சல்கள் மீறி “விட்டுடுங்கண்ணே” என்ற சைலப்பனின் கதறல் மீறி சங்கரியின் வாயில் மூத்திரம் பெய்தார்கள். ” தூங்கு”என்றாள் ஸ்டெல்லா. ஒருநிமிஷம் மறுபடியும் உடல் உதறியது. அந்த கறுத்தக் காட்டுக்குள் சங்கரி எங்கிருப்பாள் இப்போது என்று நினைக்கையில் ஏற்பட்ட பயத்தில் வியர்த்தது.சைலப்பன் தேடிப் போயிருக்கிறான் என்று ஸ்டெல்லா சொன்னது கனவில் கேட்ட மாதிரி இருந்தது. இந்த இருட்டில் எங்கே போய் தேட முடியும் ? அவள் தொடர்ந்து அலறினபடி இருந்தது காதுக்குள் இடைவிடாமல் கேட்பது போலிருந்தது. த்டால் என்று எழுந்து தண்ணீர்க் குவளையைத் தேடினாள். காலமெல்லாம் தண்ணீர்க் குவளையைக் கையிலெடுக்கும் நேரமெல்லாம் மூத்திர ஞாபகம் வருமாறு ஆகி விட்டதென்ற நினைப்பு அருவருப்பாயிருந்தது. பக்கத்து அறையில் முனகல் சத்தம் இன்னும் கேட்டபடி இருந்தது. “அம்மாச்சி தூங்காதா? என்று ஸ்டெல்லாவிடம் கேட்டாள் இவள். ஸ்டெல்லா இருட்டிற்குள் கையசைத்து “இல்ல..அதுக்கு பை நிரம்பிட்டா கஷ்டப்படும்”என்று சொல்லும் போது சுவரில் அவள் கைவிரல்கள் ராட்சத நிழலாய் பரந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் அம்மாச்சி தான் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து உற்று நோக்கும் கண்களோடு இவளைப் பார்த்தது.”யாரு”என்றாள். “வூட்டுக்கு வர்றவகள யாரு என்னனு என்ன கேள்வி”என்றாள் ஸ்டெல்லா சட்டென்று. அதை அம்மாச்சி கண்டுக்கொள்ளவில்லை என்பதை அவளின் அடுத்தக் கேள்வி காட்டியது.”கல்யாணம் ஆயிடுச்சா?”என்றாள். “ஆமா..” “எங்கருந்து வார? பேரு என்னத்தா?” “யமுனா ஆச்சி…கம்பமேடுல…”என்றவளை இடைமறித்து “ அங்க பிரச்னைனு சொன்னாகளே தாயீ…ஏதுமில்லயே?”என்றாள்.ஸ்டெல்லா சட்டென்று கண்ணை உயர்த்தி சொல்லாதே என்பது போல் பாவனை செய்தாள். ஆச்சி குனிந்து உற்றுப் பார்த்துக் கொண்டே “கேட்டுச்சா?”என்றாள்.”தெரிலயே ஆச்சி”என்றாள் இவள். “உள்ள வா”என்றாள் ஸ்டெல்லா. இவர்கள் கடக்கிறார்கள் என்ற எண்ணம் இல்லாது ” எவன் சொல்லுதான்..அரசியல்வாதியும் ஒண்ணுமில்லங்கிறான். கோட்டுக்காரனும் ஒண்ணுமில்லங்கிறான்.பத்திர்கைக்காரனும் ஒண்ணுமில்லங்கிறான்”என்று சத்தமாய் சொல்லியபடி பெரிசாய் ஏப்பம் விட்டள்.”யம்மாடி”என்று அதனோடு சம்பந்தமில்லாமல் இழுவையாய் சத்தம் எழுப்பினாள். இவள் அவளை வினோதமாய்ப் பார்ப்பதைப் பார்த்த ஸ்டெல்லா “அம்மாச்சிக்கு கொஞ்சம் உடம்பு சரிகிடையாது யமுனா…பத்து புள்ள பெத்து பெத்து தன்னை கவனிக்காது விட்டுருச்சு. முனகினா கூட இப்ப ஒண்ணுக்கு ஒழுக்கும். நாப்பது வயசுலருந்து இப்படி தானாம். வெளிய சொல்ல கூச்சப்பட்டு தெவங்கிருச்சு. இப்ப பைய கட்டி வுட்டுட்டான் டாக்டர்” என்றவள் மாற்றுப் புடவையும் ரவிக்கையும் துண்டும் கொடுத்து மாத்திக்க என்றாள். பச்சைப்பசேல் என்று தண்ணீர் மேலே பட்டவுடன் மெல்ல ஒரு தெளிவு வந்த மாதிரியிருந்தது. சங்கருக்கு போன் செய்ய வேண்டுமென்று தோன்றிற்று. பையில் செல்போன் இருக்கிறதா என்று பார்க்க மறந்தது ஞாபகம் வர அவசர அவசரமாகக் குளித்து வெளியே வந்தாள். பரபரவென்று பையில் தேடிய போது உள்பக்கமாய் செல் இருந்தது. சங்கருக்குப் போட்டபோது அவன் எடுக்கவில்லை. மாரியப்பனோடு குடிக்கப்போயிருக்கலாம். அந்தப் பழக்கம் மட்டும் இல்லையென்றால் இப்படி கூலிக்குத் தோட்டத்துக்குப் போக வேண்டியிருக்காது. ஒரு நிமிஷம் தொண்டைக்குள் முள்ளாய் இவளுக்கு அடைத்தது. ஸ்டெல்லா எட்டிப் பார்த்து “ப்ளவுஸ் சரியாருக்கா?”என்றாள். இவள் தலையசைத்ததையும் ஏறத்தாழ ரவிக்கை சரியாய் இருந்ததையும் பார்த்து ஸ்டெல்லா திருப்திப்பட்டுக் கொண்டதாய்த் தோன்றிற்று. என்ன சாப்பிடுறே என்று கேட்டாள் இவளிடம். வேணாம் வேணாம் என்று சொல்லச் சொல்ல இஞ்சி கலந்த தேயிலை போட்டு பன் கொடுத்தாள். சூடான தேயிலை உள்ளே நனைத்த பன்னுடன் சாப்பிட சாப்பிட சங்கரியின் ஞாபகம் ஒரு இனம்புரியாத குற்றவுணர்வை ஏற்படுத்திற்று. திடிரெனத் தேம்பி அழும் யமுனாவை சமாதானப்படுத்த தோன்றாமல் ஸ்டெல்லா விறைத்த மாதிரி பார்த்தபடியிருந்தாள். “தூங்கு” என்றாள் ஸ்டெல்லா மறுபடி. அவளுக்கு மிகப் பெரிய ஒரு கஷ்டத்தை ஏற்படுத்திய மாதிரி இருந்தது திடீரென்று. “காலைலேயே கிளம்பிடுறேன்”என்றாள் கிசுகிசுப்பானக் குரலில்.ஸ்டெல்லா அமைதியாய் இருந்தது தான் நினைத்தது உண்மையோ என்று நினைக்கத் தோன்றிற்று.இவளுக்கு “மணி என்ன இருக்கும்?என்றாள். அதற்கும் ஸ்டெல்லா பதில் சொல்லாது போக தலையைத் திருப்பிப் பார்த்தாள். வாய் அகன்றிருக்க ஸ்டெல்லா தூங்கியிருந்தாள். பக்கத்து அறையிலிருந்து “பரமண்டலங்களிலுள்ள எங்கள் பிதாவே”என்று அம்மாச்சி முணுமுணுக்கும் ஜெபம் தெளிவாகக் கேட்டது. சங்கரி பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்று மனசுக்குள் முருகனை நினைத்துக் கொண்டாள். ஸ்டெல்லா விழித்திருந்தால் எதனால் இந்த அணைபிர்ச்னை என்று கேட்டிருக்கலாம். பள்ளிக்குடம் வரைப் படித்தவள். நிச்சயம் விவரம் தெரிந்திருக்கும். கம்பம் தெரு வழியாய் அவள் ஒரு ராஜகுமாரியை மாதிரி சைக்கிளில் ஸ்கூல் போவதைப் பார்த்து இவள் பெருமிதமடைந்திருக்கிறாள். அப்போதெல்லாம் இப்படி ஒரு நாள் அவள் வீட்டில் பிரச்னைக்கு பாதுகாப்பு கேட்டு வருவோம் என்று நினைத்தும் பார்த்திருப்போமா என்று நினைக்கும் போது இனம்புரியாத கூச்சம் வந்தது. தூங்கினால் ஏதும் அதிர்ச்சியில் மனசிலுள்ளதைப் புலம்பித் தொலைத்து விடுவோமோ என் கிற பயமும் எழுந்தது. போர்வையை தன்னிச்சையாய் மார்பு வரை இழுத்து பக்கவாட்டாய் அணைக் கொடுத்தாள்.வெளியே சில்வண்டின் ஒலி மீறி ஸ்டெல்லா குறட்டை விட ஆரம்பித்திருந்தாள். பசித்து நீண்டு கிடக்கும் இரவின் முன் பயத்துடன் மண்டியிட்டு நிற்கும் ஒரு விலங்காய் இருளை வெறித்த படி கிடந்தாள். அம்மாச்சியின் முணுமுணுப்பும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. மெல்ல நகர்ந்து செல்போனை எடுத்துப் பார்த்தாள்.சங்கர் அவளை அழைக்கவில்லை. கூப்பிடலாமா என்று நினைத்தாள். ஒரு நிமிடம் அவனுக்கு வேண்டப்படாத ஒரு ஜந்துவாய் இருப்பது போலிருந்தது.மறுபடி போனை தலைக்கு அடியில் வைத்து விட்டுப் படுத்தாள் அம்மா என்று கதறி அழ வேண்டும் போலிருந்தது. சங்கரைக் கட்டாத என்று அம்மா சொன்னதையெல்லாம் மீறி இன்று அவனைக் கல்யாணம் செய்ததற்கு இன்று வேலை முடிந்து வீட்டுக்கு வராமல் எங்கே இருக்கிறாய் என்று கூட கேட்க திராணியற்றவனாய் அவன் இருப்பதை நினைத்து அழுகை வந்தது. என்ன எதிர்பார்ப்பில் வாழ வேண்டும்? திடீரென்று சம்பந்தமே இல்லாமல் இவள் வாயில் மூத்திரம் பெய்தவனின் கொடூரமான குரல் ஞாபகம் வந்தது. அந்தக் குரலின் வீச்சு பெருக்கெடுக்க எடுக்க தனியாய் இருப்பது போல் உணர்வு பெருக்கெடுக்க இவள் ஸ்டெல்லாவின் பக்கமாய் சுருண்டாள். ஸ்டெல்லா இவள் உடல்சூடுபட்டு திரும்பி “தூங்கும்மா..”என்றது பெருத்த ஆறுதலாயிருந்தது. மறுபடி அவள் கைகளை கோர்த்துக் கொண்டாள். மெல்ல மெல்ல மூடிய ஜன்னல் வழியாய் விடிவது , ஒரு வெளிச்ச இறகு படர்வது போல் தெரிந்தது. அறையின் சுண்ணாம்பு சுவர்களில் பெயர்ந்த காரைகளில் ஒரு வெளிச்சத்துளி புலப்பட்டது. அம்மாச்சி விறுவிறுவென அறைக்கதவைத் தட்டினாள். “மோளே…வெளிய போயிட்டேன் ..கொட்டிடு”என்றாள். ஸ்டெல்லா எழுந்து “இரு..வாரேன்”என்று உள்ளே போனாள்.மலமும் மூத்திரமுமே வாழ்க்கையாகிப் போகும் வாழ்வின் கதவொன்ரை அம்மாச்சி தட்டுவது போலிருந்தது இவளுக்கு. ஸ்டெல்லா உள்ளே வந்ததும் “நான் கெளம்பட்டா ஸ்டெல்லா? அவுக மூணு வாட்டி போன் பண்ணிருக்காக ”என்றாள். “இரு..டீ வாங்கியாரேன்”என்ற்வளிடம் வேண்டாம் வேண்டாம் என்று மல்லுக் கட்டி கிளம்பினாள். “சீலை ஏதுனு சங்கர் கேட்டா?”என்றாள் ஸ்டெல்லா வாசலுக்கு வந்து. இவள் அமைதியாக நின்று வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தாள்.திடீரென நினைப்பு வந்தவளாய் மறுபடி உள்ளே அம்மாச்சி அறைக்குள் போய் “கெளம்புறேன் ஆச்சி “என்றாள். “பாத்துப் போ. கலவரமெல்லாம் ஒண்ணுமில்லயாம். ரோசரி சொன்னா…கம்பம் போலீஸ்காரக பத்து பதினொரு இடுக்கி பெண்டுகள குமுளியாண்ட பத்ரமா விட்டுட்டு வந்தாகளாம்..வெறும் தண்ணிப் பிரச்னை தான..அரசியல்வாதிக நீச்சலடிப்பானுக…”என்றாள் ஆச்சி. முக்கிப் பேசியதில் அம்மாச்சியின் கால்களிடையே ஈரம் பரவுவதை காய்ந்த கண்களால் வெறித்தபடி இருந்தாள் யமுனா. மேலும வாசிங்க...


