நானும் விகடனும்-
>> Friday, 27 January 2012
.
*********************************
'29சி-யில் பெரம்பூரில் இருக்கும் அத்தை வீட்டில் இருந்து கிளம்பி, மவுன்ட் ரோடு டி.வி.எஸ். பஸ் ஸ்டாப்பில் அப்பாவுடனும் சுட்டெரிக்கும் வெயிலோடும் இறங்கினேன். அரை தாவணி ரெட்டை சடையுடன் ஓர் அப்பட்டமான மாணவிக்கான பிம்பம் என் மீது ஒட்டியிருந்தது. அப்பா என்னுடன் நம்பிக்கையாக வந்த அந்த நிமிஷம் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. விகடன் அலுவலகத்துக்குள் நாங்கள் நுழைந்தோம்.
'யாரைப் பார்க்கணும்?’ என்று ஒருவர் கேட்டார். அம்முவும் நானும் நடத்திவந்த 'மாறுதலா’ கையெழுத்துப் பத்திரிகையை அவரிடம் நீட்டினேன். அதில், அட்டையில் ஆசிரியர் பாலசுப்ரமணியன் கைதானதைக் கண்டித்து ஒரு கொலாஜ் ஓவியம் சிவப்ரியா வுடன் சேர்ந்து செய்திருந்தோம். அதை அவர் புரட்டிப் பார்த்துக்கொண்டே, 'எங்கு இருந்து வர்றீங்க?’ என்றார். 'திருநெல்வேலி’ என்றேன். அவர் புருவங்கள் உயர்ந்து இறங்கின.
எனது இரண்டு கதைகளை அவரிடம் நீட்டினேன். அவர் அதன் முதல் வரியை வாசித்த மாதிரி 'கொடுத்துடுறேன். தபால்ல சொல்லுவாங்க’ என்றார். ஊருக்கு வந்து அடுத்த ஆண்டும் ஆகி விட்டது. மற்ற சில பத்திரிகைகளுக்கும் கதைகள் அனுப்பி, அவை திரும்பிவந்தன. ஒரு நாள் ஒரு வெள்ளை நிற தபால் கார்டில் என் கதை தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாகவும், அதை வேறு எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பவில்லை என்றும் உறுதிமொழி கேட்டு விகடனின் கடிதம் வந்தது. அந்தத் தருணம் என் வாழ்வின் உறைந்த தருணங்களில் ஒன்று.
பத்திரிகைகள் படிப்பது தவறு என்ற கோட்பாடுகளில் உழன்ற ஒரு சமூகத்தில், என் அம்மா பத்திரிகைகள் வாசித்ததால் நானும் படிப்பது வழக்கமாயிற்று. என் சிநேகிதி தங்கத்தின் அத்தை ஒரு மிகப் பெரிய புத்தகப் பிரியை. அவர் தேர்ந்தெடுத் துக்கொடுத்த இந்துமதியின் 'தரையில் இறங்கும் விமானங்கள்’ கதை ஏதோ ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து மணியன், ஜெயகாந்தன், சிவசங்கரி, பால குமாரன் கதைகளை வாசிக்க ஆரம்பித் தேன். வீட்டில் அப்போது சுழலும் படிப் பகம் இருந்தது. 'வந்த அன்னிக்கே விகடன் தந்தா மட்டும்தான் வாங்குவோம்’ என அம்மா சொன்னதால், புத்தம் புதுசாக விகடன் வீட்டுக்கு வரும்.
நான் விழுந்து விழுந்து பாடப் புத்தகம் மாதிரிப் படித்தேன் என்றால், அது சுஜாதாவின் 'கனவுத் தொழிற்சாலை’தான். புத்தகம் வாங்கினால் அதை யாரும் பறித்துவிடக் கூடாது என்று மொட்டை மாடியில் ஒளிந்து வாசிப்பேன். பரந்த சினிமா தளத்தை முதன்முதலில் நான் அறிந்துகொண்டது அதில்தான்.
திருநெல்வேலியில் ஒரு வட்டத்தை மீறாத வாழ்க்கை கற்றுக் கொடுக்கப்பட்ட பெண்ணுக்கு ஜன்னல் திறந்து வானத்தைக் காட்டியதில் விகடனின் பங்கு ஏராளம். விகடனில் கதை வருகிறது என்பது இனம் புரியாத ஒரு நெகிழ்ச்சி அதனாலேயே வந்தது. முந்தின வாரம், கதை அடுத்த இதழில் வரும் என்றும் ஒரு சிறு தகவல் தபால் மூலம் வந்தது. விகடனும் வந்தது. படபடவெனப் புத்தகத்தைப் புரட்டுகிறேன். அவசர அவசரமாக வீட்டுக்குள் போய் பக்கங்களைப் புரட்டி கதையைக் கண்டுபிடித்தேன். அது நிழல் என்னும் சிறுகதை. ஓர் ஆப்பிரிக்க இளைஞனை ஒரு பிரா மணப் பெண் திருமணம் செய்த பிறகான நிகழ்வுகளைச் சொல்லும் கதை. தனியாக கண்ணாடியில் அந்தக் கதையின் பக்கங்களைப் பிரதிபலித்துப் பார்த்து மகிழ்ந்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அந்தக் கதைக்குச் சன்மானமாக வந்த பணத்தில், அம்மு, நான் எல்லாரும் ராயல் தியேட்டரில் போய்ப் படம் பார்த்தோம். அப்புறம் திருவண்ணாமலை சித்தி, கஸ்தூரி அத்தைக்கு என்று நான் ப்ரியம் வைத்த சிலருக்கு அழகான ஒரு விளக்கு வாங்கிக் கொடுத்தேன்.
நான் கொடுத்த அடுத்த கதையும் பிரசுரமானது. அதற்குப் பிறகு, பிற பத்திரிகை களிலும் எழுதத் தொடங்கி, முதல் தொகுப்பை ஜெகன் வெளிக்கொண்டு வந்தபோது அந்த வெளியீட்டு விழாவில் பேசிய பிரபஞ்சன், விகடனில் பணியாற்றும்போது தான் தேர்ந்தெடுத்த நிழல் கதையைப்பற்றிக் குறிப்பிட்டது ஆச்சர்யமாக இருந் தது.
இடையில் நான் பெரிதாக இயங்காத ஒரு காலகட்டம் ஒன்று இருந்தது. மறுபடி நான் தீவிரமாக எழுத ஆரம்பித்தபோது முழுசாக என் கதைகள் இடம்பெற்றது விகடனில் மட்டும்தான். 'நீங்க விகடன்ல வேல பாக்குறீங்களா?’ என்றுகூட இரண்டு மூன்று முறை கேட்டு இருக்கிறார்கள். ஓர் உறவு என்பது அதன் இருப்பின் பொருட்டல்ல... உணர்வின் பொருட்டே என்பதை எனக்கும் விகடனுக்குமான உறவு கற்றுக்கொடுத்தது.
திருநெல்வேலியில் விகடன், வியாழக்கிழமையே வந்துவிடும். பொத்திப் பொத்தி அதை ஞாயிறு மாலை வரை வாசிக்கும் ஆர்வம் என்னை சாப்பிடக்கூட விடாமல் தடுக்கும். 'விகடன் வந்துட்டா, பேச மாட்டாளே’ என்பது இன்று வரை என் மீதான குற்றச்சாட்டாக என் குடும்பம் என் மீது வைத்திருக்கிறது. அந்தக் குற்றசாட்டை என் இறுதி மூச்சு வரையும் சுமக்க விரும்புகிறேன்.
விகடன் சம்பந்தமான இளவயது நினைவுகள் மனசில் இன்னும் அலையடிக்கின்றன. சௌபா அண்ண னின் கட்டுரைகளைப் படித்து, எங்களோடு படித்த அவரது உறவுக்காரப்பெண் ணிடம் அவரைப் பற்றி நானும் அம்முவும் விசா ரித்து அலைந்த நாட்கள். எனக்கு அரசியல் கற்றுக் கொடுத்தது ஜூ.வி-யின் அரசியல் கட்டுரைகள்தான் . மறுபடி மறுபடி ஒவ்வொரு கட்டுரையையும் வாசிப்பேன். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஈழம் குறித்த விகடனின் நிலைப்பாடு ஒன்றுதான். இன்று தமிழக அரசியல்வாதிகளுக்கு இல்லாத உண்மையான, தீர்க்கமான தமிழீழக் கனவுகள் விகடனுக்கு எப்போதும் உண்டு.
விகடனில் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர வேண்டும் என மனசில் நிறைய ஆசைகள். என் ஆசை மறுக்கப்பட்டு, நான் எழுதிவைத்த அப்ளிகேஷன் அனுப்பப்படாமல் போக, அதை நோட் டுக்குள் வைத்து வைத்து ஆற்றாமையைச் சுமந்தலைந்த நாட்கள் இன்னும் மனசின் ஓரங்களில்.
'ஹலோ’ பண்பலை வானொலியில் நான் பணியாற்றிய காலங்களின் மிகக் கௌரவமான பரிசாக விகடன் விருதை மனசில் சுமந்திருக்கிறேன். தெற்குப் பக்கத் திறமைகள் மீது பெரும்பாலான ஊடகங்களின் கவனம் விழுந்தது இல்லை. ஆனால், அதை விகடன் கவனித்த படியே இருக்கிறது என்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். ஓர் எழுத்தாளராக விகடன் கதைகளில் சில பரீட்சார்த்த முயற்சிகள் செய்யலாம். பேசப்படாத பகுதிகளை உரக்கவே சொல்லலாம். பெண்ணுடல் சார்ந்த வெளிப்படையான விஷயங்களைப் பரவலாக விகடனில் தொடர்ந்து படைப்பாளிகள் பகிர்ந்தும் வருகின்றனர்.
வெளியே தெரியாத நபர்களின் கவிதைகள் உலா வரும் 'சொல்வனம்’ பக்கம் விகடனில் எனக்கு மிகவும் பிடித்த பக்கம். கயத்தாறில் பைபாஸ் பாலம் போட்டது பற்றிய ஒரு கவிதை அதில் வெளியானது. இன்றும் வாராவாரம் ஊருக்குப் போகும்போது கயத்தாறு தாண்டும் நேரம், 'தனியாக நின்றிருக்கும் கட்டபொம்மன் பற்றின’ வரி எனக்கும் கவலையோடு ஞாபகத்துக்கு வரும்.
என் வாழ்வின் துயர் அடர்ந்த பகுதிகளில் நான் யாருடனும் தொடர் பில் இல்லாமல் இருந்தபோதும், விகட னுடன் தொடர்பில் இருந் தேன். தொடர்ந்து விகடனில் கதைகளின் வாயிலாக அதன் ரகசியங்களைப் பகிர்ந்தே வந்திருக்கிறேன் என்றே இதை எழுதும் கணம் நினைக்கத் தோன்றுகிறது. போன வருடம் என் சிறுகதைத் தொகுப்பைத் தொகுத்தபோது அது நிரூபணமும் ஆயிற்று.
விகடனில் நான் எழுதிய நிழல்வலை என்ற கதையின் பிரதி என்னிடம் இல்லாதுபோனது. தொகுப்புக்காக அதைத் தேடிய போதும் கிட்டவில்லை. அதை என் வலை தளத்தில் நான் பகிர்ந்துகொண்டபோது, ஜெர்மனியில் இருந்து சுவேக் என்கிற நண்பர், அந்த விகடன் கதை தன்னிடம் இருக்கிறது என்று சொல்லி, அவர் சாவியை இங்கே ஊருக்கு அனுப்பி, பெட்டியில் இருந்த அந்தக் கதையின் நகலை அவர் அப்பா மூலமாக அனுப்பிவைத்ததை நினைத்தால், அதன் அடித்தளத்தில் இருந்த விகடனின் உறவுப் பாலம் சிலிர்க்கவைக்கும்.
ப.திருமாவேலனின் அரசியல் பார்வை, நா.கதிரின் கட்டுரைகள், எஸ்.ரா-வின் 'கதாவிலாசம்’, சுகாவின் 'மூங்கில் மூச்சு’,பிரகாஷ் ராஜின் தொடர், இப்போது ராஜு முருகனின் தொடர் என்று விகடனின் அற்புதத் தொடர்களில் வாழ்க்கைக்குக் கற்றுக்கொள்ள நிச்சயமாக ஒரு பக்கம் இருக்கும். இருள் சூழ்ந்த அடர் காட்டில் சூரியனின் அனிச்சையான புகுதல்போல என் வாழ்வின் பெரும் பகுதிக்குள் அந்தப் பக்கங்கள் புகுந்து இருக்கின்றன.
தமிழ்நாட்டின் தென்பகுதியில் இருந்து கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்வில் ஒரு குமிழ் தமிழைச் சுவாசித்ததால் இன்று எழுதும், படிக்கும் பலருக்கு அறிமுகமான ஒருத்தியின் பகிர்தல் இது. இத்தனைக் கால நெடும் பயணத்தில் மனிதர்கள் என்னைக் கைவிட்டு இருக்கிறார்கள். அன்பைமுறித்து மறந்து இருக்கிறார்கள். என் வலியைக் கொச்சைப்படுத்தி உவப்பான பானமாக அருந்தி இருக்கிறார்கள். யாரும் அற்ற வெளியில் என்னை நிறுத்தி அந்நியப் படுத்தி இருக்கிறார்கள்.
அப்போதும் துணை நின்ற என் முதல் பத்து நண்பர்களில் விகடன் முக்கியமானவன்!''


0 comments:
Post a Comment