வந்தவங்க...

வாங்க

அங்கம்மாள்...

>> Monday, 21 November 2011

”உள்ள வச்சுப் பேசாமா?”என்றார் அங்கம்மாள் சிரித்து. வாசலில் இன்னொரு பக்கத்து வீட்டுப் பெண்மணி உட்கார்ந்திருக்கிறார். டி..கிருஷ்ணாபுரத்து தெருக்களில் ஆடுகள் படுத்திருந்தன. ”இங்கய உக்காரலாமே” வாசலில் ஒரு உரலில் உட்காரப் பார்த்தோம். உடனே உள்ளிருந்து ஒரு மடக்குப் பாய் எடுத்து உட்கார்ந்து, ”இதுல உக்காரும்மா. மண்ணு தரைல….”என் கிறார் அங்கம்மாள்.

தண்ணி கொடும்மா என் கிறார் மலைச்சாமி. அவர் மகன். அங்கம்மாள் உள்ளே போன அவகாசத்தில்,”அம்மா என் முன்னாடி பேசாது. நீங்க உள்ள போங்க” என் கிறார் கிசுகிசுப்பான குரலில். அவரே உள்ளே பாய் விரித்து விட்டு “கலர் வாங்கியாறேன் என் கிறார். தண்ணியை முன்னாடி நீட்டிய அங்கம்மாள்- அவன் முன்னால பேச கஷடப்படுவேன்னு போறான். வந்துடுவான் என் கிறார். மெலிந்த உடல். ரேஷன் அரிசிக் கடையின் சேலை. சில இடங்களில் கைத்துடைத்த தடயமும் சில கிழிந்த பொட்டுக்களும் இருக்கின்றன.ஒரே அறையிலான வீடு. குருவையா கோட் போட்டுக் கொண்டு அங்கம்மாளோடு கல்யாண சேலையில் எடுத்த போட்டோ. பிள்ளைங்களோடு சேர்ந்த எடுத்த போட்டோ. (”மலைசாமிக்கு ஸ்கூல் பிரெஸ் எடுத்திட்டு அப்படியே எடுத்த போட்டோ .”) மண் தரை. ஓரமாய் ஒரு கலைஞர் தொலைக்காட்சி.

”கேளுங்க. நீங்க எத கேட்டாலும் சொல்லுவேன். எனக்கு நியாயம் வேணும். இன்னொரு வாட்டி எனக்கும் என் புருஷனுக்கும் நேர்ந்த மாரி வேற யாருக்கும் நடக்கக் கூடாது. அதுக்குத் தான் ஆத்தா இத்தினி வருஷமா போராடிட்டு இருக்கேன்.” என்றவரின் உதடு பிரிகிறது. அழுகை கிழித்துக் கொண்டு வருகிறது.

எழுந்து அவர் கணவரின் புகைப்படத்தைக் காட்டி,” ராசா மாதிரி இருப்பாரு. ஒத்த ஆளா இந்த வீட்டைக் கட்டி முடிச்சிட்டாரு தெரியுமா? பருத்திக் காட்டு வேல .மூணு வருஷத்துல மூணு புள்ள பெத்தது கிராமத்துல நான் தான். சந்தோஷமா தான் இருந்தோம். எங்க நிலத்துல பஞ்சம்மாளும் அவுக புருஷனும் வேல பாத்தாங்க. அவுங்க மக கல்யாணத்துக்கு வந்த மாப்பிள்ள வீட்டுக்காரங்க பூச்சி, பாலு, அய்யனார் எங்க தோட்டத்து பம்பு செட்டுல குளிச்சாங்க. எங்க வூட்டுல கஞ்சித் தண்ணி குடிச்சாங்க. அதெல்லாம் முடிஞ்சிப் போச்சு. ஒரு நாள் காலைல பருத்தி தோட்டத்துக்கு போலீஸ் வந்தாக . டிஎஸ்பி தங்கபாண்டிய
னுட்டு பருத்திப்பூவ என் கைலருந்து வாங்கிப் பாத்துட்டு ”இப்படியா இருக்கும் பருத்திப்பூவுனு கேட்டாக. சடாலுனு கூட வந்த ஆளு உம் புருஷன் எங்கனு கேட்டான்.தெரியலனு சொன்னோன்ன என்னை போலீஸ் ஜீப்புல கூட்டிட்டுப் போனாக. வழில என் கொழுந்தன கடந்து ஜீப் போனப்ப ”போலீஸ் என்னைக் கூட்டிட்டுப் போகுதுனு அவர்ட்ட சொல்லிரு”னு உரக்க சொன்னேன். அவனும் சரினான்.
என்னைய கூட்டிட்டு உசிலம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனாங்க.சோறு தண்ணிலாம் தரல. வூட்டுக்காரரை கண்டுப்பிடிக்கல. சாயங்காலம் என்னை ஊர்மெச்சிகுளம் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போறாங்க. ”உன் புருஷன் எங்கனு கேட்டு நிக்க வச்சாங்க.ராப்பூரா கையை பின்னால கட்டி நிக்க வுட்டாங்க. கால் மொழி கெஞ்சும். அப்படியே சரிஞ்சா முட்டில அடிப்பாங்க. ராத்திரி ஒரு மணிக்கு என் புருஷனை கோடாங்கிநாயக்கன்பட்டில புடிச்சிருறாங்க.அங்கருந்து அவரை ஊமச்சிகுளம் கூட்டிட்டு வந்துட்டாங்க. வாரெண்டுலாம் கிடையாது. வாசல்லேயே என்னப் பாத்துட்டு “அடிச்சாங்களா”னு கன்னத்துல கைத்தொட்டு கேட்டாரு. உடனே பின்னாலருந்து ஒரு அடி. மனுஷன் குப்புற கீழ மல்லாக்க விழுறார். கதற கதற அடிக்காங்க. அவருக்கு வாய்ல நுரை தள்ளுது.. “உன் வீட்டுல பேசின பூச்சி,பாலுஎங்கனு கேக்காங்க. அவன் திருடின நகைலாம் நீ எங்க வித்தனு கேட்டு கேட்டு அடிக்காங்க.

நாங்க மட்டுமில்ல. பஞ்சாம்மா, அவ புருஷனையும் கூட்டிட்டு வந்துடுறாங்க.அவங்களையும் அடிக்கிறாங்க. எனக்கு பாவமா இருந்து “ஏன்யா அடிக்கிறீங்க?னு கேட்டேன். என் தோள்பட்டைல கால்ல,உட்கார்ற இடத்துல லத்தியால அடிக்கிறானுங்க. அந்த இடமே ரத்தமா கிடக்கு. தாகத்துக்கு தண்ணி கேட்டா”மூத்திரம் பெஞ்சி குடினு சொல்றாங்க. எம் புருஷன் “எப்படியா மூத்திரம் வரும்? சாப்பிடவாச்சும் தாங்க”னதுக்கும் அடி.. அவரையும் என்னையும் மட்டும் கருப்பாயூரணி காவல் நிலையத்துக்கு கூட்டிட்டு போறாங்க. என்னை உள்ள தள்ளிட்டுப் போய் நிர்வாணப்படுத்துறாங்க. நிமிர்ந்து பார்த்த என் புருஷனும் நிர்வாணமா தொங்க வுட்டுருக்காங்க.அவரு அழுறாருஅவரோட பிட்டத்து சதைலாம் பிய்ழ்ஜ்சி கீழே கிடக்குது.புழுவா துடிக்காரு.உடன படுபாவிக மிளகாப்பொடிய கண்ணுல தூவுதானுங்க. எம் புருஷன் என் கண்ணு முன்னால சாகுறது எனக்கு அவரோட முனகலா கேட்டுச்சு. எங்கை உடைஞ்சி இம்புட்டு பெரிசா வீங்கிக் கிடக்கு. ”ஒத்துக்கோடி. மருதைல ஒரு கடைல சாமான வித்தோம்னு ஏதாச்சும் ஒரு கடைல கைய காட்டு வுடு. வூட்டுக்கு விட்டுருவோம்”னாங்க. எப்படி கை காட்ட முடியும்? அந்த பாவம் நமக்கெதுக்கு?
முடியாதுனு வீட்டுக்காரர் சொன்ன வுடனே போலீகாரனுங்க 4 பேரு மாறி மாறி என்னை கற்பழிச்சாங்க. அது ஒரு வெராண்டா. விசாரணைக்கு கூட்டிட்டு வந்த ஆளுங்கலாம் கம்பி வழியா கத்தவும் பய்ந்து பாக்குறாங்க.”மூணு பேரும் உங்கூட ஒரே நேரத்துல இருந்தனுகளா? உன் புருஷன் காவல் காத்தானா?னு சொல்றானுங்க. என் புருஷன் அழுறார். அவளை வுட்டுறுங்க. என் தோட்டத்த வித்து தர்றேன்ங்கார். லத்திக் கம்பால என் உறுப்புக்குள்ள விட்டானுங்க. கதறின எம் புருஷன ஆணி செருப்பு வச்சி குத்தினானுங்க. நகத்தை இழுத்தானுங்க.கொடுமை சாமி.காலைல ஒரு தடவ, மத்தியானம் ஒரு தடவ, ராத்திரி ஒரு தடவனு மாறி மாறி அடிச்சானுங்க. அடிச்சி முடிச்சிட்டுப் போனப்பிறகு நான் வீங்கிருந்த கைய இழுத்து சேத்துக்கிட்டு எந்திரிச்சு அவர் கால் தொங்கினத என் தோள்ல தாங்கிப் பிடிச்சிப்பேன். உள்ளாற வந்து எட்டி மிதிப்பானுங்க.

என் வீட்டுக்காரரோட சொந்தக்காரர் அந்த ஸ்டேஷன்ல ஏட்டா இருந்தார். அவர கை எடுத்து கும்பிட்ட எம்புருஷன் “காப்பாத்து”னாருங்க.”நான் உன்னை புடிச்சிருந்தேன்னா ஒத்துக்க வச்சி எஸ்.ஐ ஆயிருப்பேன்”னு சொன்னார்.இதுல எங்க வீட்டுக்குப் பக்கத்து வீடு. அந்தாள் தான் எங்கள காட்டிக் கொடுத்தது. திரும்ப ஊருக்கு நாங்க வந்தோம்னா பிரச்னையாகும்னு அடிச்சிக் கொன்னுடுங்கனு சொன்னான்.

ராத்திரி ரெண்டு பேரையும் சங்கலியால கட்டி நிர்வாணமா ஸ்டேஷனுக்குப் பக்கத்துல ராத்திரி ஒரு மணிக்கு நடக்க வச்சானுங்க. என்னால நடக்க முடியாம கீழ தெந்த தெந்த என் மார்பை கடிச்சானுங்க.”என்று தேம்பினார்.

“அன்னிக்கே செத்துட்டோம் தாயீ. அடுத்த நாள் சீலைலாம் கட்ட வுட்டு ஊமச்சிக்குளம் ஸ்டேஷனுக்கு வந்தாங்க.அங்கயும் அடிச்சாங்க. சாட்டை,மூங்கில் கட்டைலாம் வச்சி அடிச்சானுங்க.இதெல்லாம் விடக் கொடுமையா அவரோட நாக்குல ஓட்டைப் போட்டானுக. எப்படி துடிச்சார் எம் புருஷன். ராசா மாதிரி நல்லா இருப்பார். “என் புருஷன காப்பாத்துங்கனு அழுதேன். ரெண்டு பொமபளைங்க வந்து ஊசி போட்டுட்டு போனாங்க. ஆனா எம்புருஷன் துவண்டுட்டே போயிட்டார். போலீஸ்காரங்களே பயந்துட்டாங்க. நேரா எங்க ரெண்டு பேரையும் உசிலம்பட்டி டி எஸ்பி முன்னால கொண்டுப் போனாங்க. அவரு எங்களைப் பார்த்து பயந்துட்டாரு. உடனே அவருக்குத் தெரிஞ்ச ஆஸ்பத்திரில கொண்டு போய் சேர்க்க டாக்டருட்ட போன்ல பேசினாரு. செந்தில ஆஸ்பத்திரி கொண்டு போனாங்க. டாக்டரு பேரு சுப்பிரமணியம்(reg no:33678). அன்னிக்கு ஞாயித்துக் கிழமை வெறுமே 2 பேருக்கும் ஆளுக்கொரு ஊசி போட்டாங்க. கட்டில்ல போட்டாங்க. அவரு குப்புறபடுத்திருக்கார்-”நான் செத்துருவேன்ல. நீயும் உசிரோட இருக்காத.நம்ம புள்ளங்க தானா பருத்தி மாதிரி வளரும்னாரு.எங்கைய பிடிச்சிக்கிட்டாரு. கண்ணுலாம் சொருகிருச்சு.
உடம்பு சில்லுனு ஆயிடுச்சு. என் ராசா போயிட்டார். நான் கட்டில் உசரத்துலருந்து குதிச்சேன். க்ரில் கதவுக்கு பக்கம் ஆளா போச்சி. நான் ஒவ்வொருத்தர்ட்டயும் கெஞ்சினேன். ஆர்டிஓ வந்தாங்க. என்ட்ட 2 பொம்பளைங்க வந்தாங்க. என்னையும் கொன்னுடுங்கனு கத்தினேன். அவங்க நாங்க உன்னை காப்பாத்த வந்திருகோம்னு சொன்னாங்க.என்னைத் தூக்குறாங்க. காலுக்கிடைல குபுகுபுனு ரத்தம் கொட்டுதாம்.என்னைக் கொண்டு போய் மீனாட்சி மெஷின் ஆஸ்பத்திரில பீப்பிள்ஸ் வாட்ச் காரங்க சேக்குறாங்க.

மூணாம் நாளைக்கு என்னப் பாக்க முதல்வர் கருணாநிதி வர்றார். இருபது லட்ச ரூபா கொடுக்குறேன். கேசை வாபஸ் வாங்கிடுனு சொன்னார். நான் நிலத்தை வித்து ரூபா தர்றேன். என் புருஷனைத் திருப்பிக் கொடுங்கனு கேட்டேன். மறுநாத்திக்கு பேப்பர்ல கலைஞர் வந்து ஆறுதல் கூறினார்னு செய்தி போட்டாங்க.

13 வருஷமா போராடுறேன். திடீர்னு 2 அக்யூஸ்டை கூட்டிட்டு வந்து கோர்ட்டுல நாங்க தான் குருவையாவைக் கொன்னோம்னு சொல்ல வச்சாங்க. ஜட்ஜ் “எல்லாம் சரி.இந்த கோர்ட்டுல அங்கம்மா யாருனு காட்டுனு கேட்டார்.அவங்களுக்குத் தெரில. ஆனா கோர்ட்டுல அவங்களை விட்டுட்டாங்க. அப்புறமா 2 வைன் ஷாப் காரங்கள வச்சி நாங்க பருத்தி விக்க உசிலம்பட்டி போவோம்னோம்னும் அங்க பக்கத்துல இருந்த வைன் ஷப்ல குடிப்போம்னும் சொல்லி குடிச்சிட்டு எம்புருஷன் தகராறு பண்ணப்ப தலைல அடியாயிடுச்சுனும் சொல்ல சொன்னாங்க. குற்றம் சாட்டப்பட்டவங்க ஸ்டே வாங்கி இந்த கேஸ் முடியுற வரைக்கும் சம்பளம் வர்ற மாதிரி பாத்துக்கிட்டாங்க.

அந்த டாக்டருக்கு காசு கொடுத்து கேரளாக்கு அனுப்பிட்டாங்க. ஆர்.டி.ஓ நல்ல மனுஷன். அவரும் இப்ப எங்கருக்கார்னு தெரிலப்பா. முத அக்யூஸ்டா இருக்குற மகாலிங்கம் கவுரதையா ரிட்டையர் ஆகி பென்சன்லாம் வாங்கினாரு. இப்ப அதுக்கும் கேஸ் போட்டு நிறுத்தி வச்சிருக்காங்க.கேஸ் இழுக்கணும்னு அவனுகளே திடும்னு “டிஎஸ்பியை அக்யூஸ்டா சேக்கணும்னு மனுப் போட்டானுக. அது கொஞ்ச காலம் இழுத்துச்சு.அவரயும் சேர்த்துக்கிட்டு இருக்கணும். சேர்க்கல…

ஊர்ல விசேஷ வீட்டுக்கு என்னை கூப்பிட மாட்டாங்க. கேசுக்காக போனா எவன பாக்கப் போறாளோனு சொல்வாங்க.இதெல்லாம் பத்தி எனக்கு கவலையில்லை. நான் ஜெயிக்கணும். காட்டுல பாம்பு என்ன்னைக் கடிச்சிட்டு. ஒரே புடுங்கு. தூக்கி எறிஞ்சிட்டேன்.நான் கேசுல ஜெயிக்கிறவரைக்கும் சாக மாட்டேன்னு பாம்புட்ட சொல்லிட்டேன். கேஸ் தோத்துப் போச்சுனா அப்படியே கோர்ட்டுலருந்து குதிச்சிருவேன். வாழ மாட்டேன். இன்னொரு அங்கம்மா என்ன மாதிரி தமிழ்நாட்டுல வர மாட்டா இல்லையா?

என் மகன் வக்கீலுக்கு படிக்க வச்சிருக்காங்க. மைசூர்ல அவன் சிறந்த வக்கீல்னு பரிசு கொடுத்தப்ப என்னைக் கூப்பிட்டு கொடுத்தாங்க. அவர தான் அந்த நிமிஷம் நினைச்சேன்.
கேஸ்ல நேரடி சாட்சியான பஞ்சம்மாளுக்கு ரூபா கொடுத்து மாத்தப் பாக்குறாங்க.2001lல சென்னை உயர் நீதிமன்றத்துல காசிமலைங்கிற சாட்சி அவரை போலீஸ் பொய்சாட்சி சொல்ல சொல்றாங்கனும் பாதுகாப்பு கேட்டும் பெட்டிஷன் போட்டாரு. அதுக்கு யோசிச்சு யோசிச்சு 2010ல தீர்ப்பு சொல்லிச்சு கோர்ட்டு- இதெல்லாம் மாவட்ட கோர்ட்டுல பாருங்கனுட்ட்டு.இப்ப ஞானசேகரன் ந்க்கிற எஸ்.ஐ இப்ப மதுர ஹைகோர்டுல இருக்கார். ராமசாமி சிவகாசில. தனுஷ்கோடி தான் ரத்த கேன்சர் வந்து போயிட்டார். போஸ்ட் மார்ட்டம் பண்ண டாக்டர் செத்துட்டார்.

முழுசா 13 வருஷம். அந்த மூணு திருடங்களும் ரெண்டு வருஷத்துல ஜெயில்ல இருந்துட்டு வெளியே வந்துட்டாங்க. பஞ்சம்மா, அவ பொண்ணு நல்லாருக்காங்க. ஆனா எம் புருஷன்?” நீண்ட நேரத்துக்கு அமைதியாக இருக்கிறார். கண்கள் இப்போது வறண்டு இருக்கிறது. என் கைகள் அவர் கையை பற்றுகிறது. பாளம் விழுந்து, வறண்ட லேசாக வீங்கிய கையது.
“தொடுறியா? ஆனா எனக்கு உணர்ச்சி இல்லயே? லேசான குரலில் தான் சொல்கிறார்.
அவர் என்னை மட்டும் சொல்லவில்லை என்பது மட்டும் புரிகிறது.

2 comments:

சி.பி.செந்தில்குமார் 21 November 2011 23:08  

பத்திரிக்கைகளில் கண்ட உங்களை வலைப்பூவில் கண்டது மகிழ்ச்சி

rishvan 18 January 2012 18:40  

அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...