என் மவுனங்களில் உறையும் வார்த்தைகள்...
>> Sunday, 23 January 2011
என் சிறுகதைத் தொகுப்பு "வாக்குமூலத்திற்கு "மவுனங்களில் உறையும் வார்த்தைகள்...
கதைகளைத் தவிரவும் பிரத்யேகமாய் என்ன சொல்லலாம் என்று யோசித்தால் மழைக்குப் பிறகான அமைதி மாதிரி என்னை சுற்றி நிசப்தமே சூழ்கிறது.அந்த நிசபதத்தில் பொதிந்திருக்கும் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உங்களுக்கும் இந்தத் தொகுப்பைத் தொடர்ந்து வாசிக்கும் போது புலப்படக் கூடும்.மனிதர்களை எடைப் போட நான் வெகு தாமதமாகத் தான் கற்றுக் கொண்டேன்.அல்லது இன்னும் கற்றுக் கொள்ளவில்லை.இரண்டையுமே ஏற்ருக் கொள்ளலாம். இல்லை நிராகரிக்கலாம் நீங்கள்.
திட்டமிட்டு இரு கரைகளுள் செல்லும் நதியின் வாழ்க்கை எனக்கு வாய்ககவில்லை. வெள்ளத்தில் கரை புரண்டு ஓடி தன் கரையை தானே தீர்மானித்துக் கொள்வது போல் என் கரைகளை நான் நிர்ணயித்துக் கொண்டேன்.அதனாலேயே எனக்குப் பெண்கள் பற்றின பொதுபிம்பங்கள் சமீப காலமாய் எரிச்சலூட்டவே செய்கின்றன. சூழல்களிலும் வலிகளிலும் சிக்கி எதிர்ந்துப் போராடும் பெண்களைப் பற்றி பாலியல் தாக்குதல்கள் நிகழ்த்தும் அறிவுஜீவிகள இங்கு ஏராளம். அதற்கு அவர்கள் அவள் மேல் கொண்ட பாலியியல் இச்சையை நேரடியாக வெளிப்படுத்தலாம்.அதிகமான வன்முறை பெண்ணின் மீது இன்னும் பாலியியல்ரீதியாகவே நிகழ்கிறது.
எனக்குத் தெரிந்த ஒரு பெண். இருபது வயதிருக்கும்.அவளுக்கு அப்பா கிடையாது.அவளது வருமானத்தில் தான் குடும்பமே நடந்து கொண்டிருந்தது.அவள் தங்கையைக் கல்லூரியில் படிக்க வைத்துக் கொண்டிருந்தாள்.அவளைப் பற்றி ஒரு பாலியியல் புரளியைக் கிளப்பி விட்டு அந்தப் புழுதியில் முத்துக் குளித்த ஆண்களை நான் அறிவேன். பெண்களுக்கே வதந்தி பேசும் புத்தி என்று பரவலான கருத்தை பரப்பி விட்டதன் மூலம் குற்றங்கள் புரிவது சுலபமாகிறது சிலருக்கு. அப்படியெனில் நல்ல ஆண்களே இல்லையா ? . இருக்கிறார்கள். மோசமானப் பெண்கள் இருக்கிறார்களா? இருக்கிறார்கள். பொதுக்கருத்துக்களின் மூலமாக தீர்ப்புகள் எழுதப் படாமல் இருப்பதே நலமெனத் தோன்றுகிறது. பின் என்ன தான் பிரச்னையாக இருக்க முடியும்?
கற்பு,கலாசாரம் என்று பொய்யான கட்டுமானங்கள் மூலமாக ஆண்கள் பார்வையிலேயே சமூகம் கட்டமைக்கப் பட்டு உள்ளது.ஒட்டுமொத்தமாய் இந்தக் கட்டமைப்பு மனிதபண்புகளின் மேல் மறுகட்டமைப்பு பண்ணப்படுமெனில் அதுவே தீர்வாக இருக்கும்.
இந்த கதைகள் எழுதப்பட்ட காலகட்டங்களில் பயணங்கள் எனக்கு நிறையவே வாய்த்தது.இந்த பயணங்கள் பெரும்பாலும் பேருந்து பயணங்களாகவே அமைந்தது. இரவின் இருட்டிற்குள் நகரும் வீடுகள், மரங்கள், யாருமற்று விரியும் தெருவினுள் புகும் பேருந்து என ஒரே நிமிஷத்தில் பல விஷயங்களோடு பொருந்துவது கூட சந்தோஷமாய் இருக்கும்.
உலகத்தின் கடைசி மனிதனுடன் உரையாட வேண்டும் என்று தோன்றியதெல்லாம் அப்போது தான். அதன்பொருட்டே நான் கண்டதை,கேட்டதை கதைகளாய் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இந்தத் தொகுப்பில் என்னால் கண்னீர்த் துளியின்றி கடந்து போக முடியாத கதை, வாக்குமூலம். அந்தக் கதை எனதன்பின் சாட்சியாய் என் மகனிடம் நாளை பேசும்.அந்த கனம் நீங்கள் அந்தக் கதைக்குள் புகும் சமயம் ஏற்படலாம். அடுத்தப் பக்கத்தைத் திருப்ப உங்களுக்கு ஒரு கண இடைவெளியும் மனதில் ஒரு துளி ஈரமும் ஏற்படில் என் அன்பு ஜெயிக்கும் என்று நீங்கள் வாக்களித்ததாய் நினைப்பேன்.
வாழ்ந்த முதல் பகுதியைக் காட்டிலும் இப்போது எனக்கு நிறைய மனிதர்கள், நிறைய ஊர்கள் பழக்கம் உண்டு. சுதந்திர காற்று உண்டு.என்னிடம் பொய்மை இல்லை. எந்த உறவுக்கும் கேடயம் ஏந்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. தொலைத்தப் பொழுதுகளையும் மீண்டும் புதுப்பித்துக் கொண்டால் நான் சென்றடைந்திருக்கக் கூடிய தூரங்கள் வேறாய் இருந்திர்க்கும். மறுபடியும் ஒரு வாழ்வை முதற்புள்ளியிலிருந்து வாழ்வது எளிதானதில்லை.அது ஒரு வரம்.
இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் புனைவுகள் என்று பொய் சொல்ல முடியாது. கதைகள் நெடுக பரவிக் கிடக்கும் ஏக்கங்கள் உங்களுக்கு அந்நியயப்பட்டு இராது. ஒற்றை உலகத்தை கடவுள் வானத்தை வைத்து மூடினது போல் இன்னும் நாம் மறைக்கப்பட்டவைகளையே நிஜமென நம்புகிறோம். நிர்வாணத்தை மறுக்கும் மனநிலை இருக்கும்வரை இது போல் போலிகளே உண்மையாக கருதப்படுவார்கள்.நேற்று தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த போது நித்தியானந்தாவைப் பார்த்த என் தோழி "இன்னுமா இவருக்குப் பின் ஒரு கூட்டம் என்றாள். போலிகளுகளுக்குக் கிடைக்கும் அக்மார்க் முத்திரைகள் வேடிக்கையாய் இருக்கிறது. உடலை நாம் கவர்ச்சியின் அம்சமாக நினைக்கும் வரை காமத்தை காதலின் வெளிப்பாடாக கொள்ளாத வரை அம்மணங்கள் நம்மை மறைவாக கவரக்கூடும்..இதையெல்லாம் நான் சொல்வதைக் காட்டிலும் என் கதைகள் சொன்னால் சந்தோஷப்படுவேன்.
இந்தத் தொகுப்பின் கதைகளுக்குப் பின்னால் ஒவ்வொரு மனிதர்கள் இருப்பது போல் தொகுப்பிற்குப் பின்னும் மனிதர்கள் இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமானவர்கள் எஸ்.ராவும் பிஸ்மியும்.எஸ்.ரா மீது எனக்கு பெரிதும் மதிப்பும் அன்பும் உண்டு. அவரின் முன்னுரையை எனது கர்வமாக அணிந்து கொள்கிறேன்.தனிமையின் அடர்த்தியில் புலப்படும் கரங்களின் ஸ்நேகத்தோடு அவரது முன்னுரை இந்தத் தொகுப்பை அலங்கரிக்கிறது.
பிஸ்மி.எல்லா காலகட்டங்களிலும் எல்லா மனிதர்களோடான உறவுகள் சீராக இருந்ததில்லை. அப்படி சீராக இருக்கும் உறவுகளும் ஒரு கர்வம் தான். அந்த கர்வம் பிஸ்மியால் எனக்கு மறுபடியும் வாய்க்கிறது.
அடுத்ததாய் விஜயன் சார். அவரின் அதிக வாசிப்பும் எளிமையாய் அதைப் பகிர்ந்து கொள்ளும் திறனும் என்னை வசீகரித்திருக்கிறது.அவரின் இந்த முகவுரையை நான் பலமாக கருதுகிறேன்.கடந்த நான் கு ஆண்டுகளாய் மிக மிக சவுகரியமான மனநிலையோடு புழங்கும் சூழலை எனக்கு ஹலோ பண்பலை அலுவலகம் ஏற்படுத்தி தந்துள்ளது.அதற்கும் நன்றி.மிக குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் அது ஆனந்த விகடனாய் தான் இருக்க வேண்டும்.இந்தத் தொகுப்பில் உள்ள பல கதைகள் விகடனில் வெளியானவை. விகடன் நிர்வாகத்திற்கு நன்றி. மட்டுமல்ல.நான் பிரமிக்கும் ஓவியர் மருதுவின் ஓவியத்தோடு இந்த தொகுப்பு வெளியாகி இருப்பது அவர் எனக்கு தந்திருக்கும் அங்கீகாரம்.ஒரு பெண்ணின் தனிமையை இதை விடவும் துல்லியமாய் வார்த்தைகளாலும் பிரதிபலித்து விட முடியாது.இவர்களுக்கு செலுத்த நன்றியை மீறும் வார்த்தைகள் தேடினபடி இருக்கிறது மனசு
இந்தத் தொகுப்பில் சில கதைகள் துப்பறிந்து கண்டெடுக்கப்பட்டவை.நிழல்வலை கதை என்னிடம் இல்லை என்று என் வலைப்பதிவில் எழுதியதும் ரஷ்யாவிலிருந்து ஒரு நண்பர் சுவேக் தன் பெட்டிப் பூட்டின சாவியை மதுரைக்கு அனுப்பி வைத்து டைரிக்குள் கிழித்து வைத்திருந்த அதன் பிரதியை அனுப்பித் தந்தார்.
அது போல் தான் மழைக்கால மரணங்கள் கதையை சுரேஷ் கண்ணன் அனுப்பியதும். அந்த அன்புக்கு தலை வணங்குகிறேன்.சுரேஷ் கிருஷ்ணன் அந்த கதையோடு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருந்த ஒரு சிலவறறை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அன்புள்ள தமயந்தி
பிப்ரவரி 16-28, 2006 புதியபார்வை இதழில் பிரசுரமான உங்களின் சிறுகதை 'மழைக்கால மரணங்கள்' பிரதி கிடைத்தது. அதனை ஸ்கேன் செய்து pdf கோப்பாக இத்துடன் இணைத்துள்ளேன். சரியாக இருக்கிறதா என்று தெரிவிக்கவும். உங்களின் சிறுகதைத் தொகுப்பு சிறந்த முறையில் உருவாக்கப்படவும் வெற்றி பெறவும் என்னுடைய வாழ்த்துகள்.
நன்றி.
சுரேஷ் கண்ணன்.
பிற்சேர்க்கை: நாகரிகமாகவும் நியாயமாகவும் பார்த்தால் இந்தக்கடிதம் இதனுடன் முற்றுப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இதனுடன் சம்பந்தப்படட கொஞ்சம் சுயபுலம்பலையும் காது கொடுத்துக கேட்குமாறு வேண்டுகிறேன். :-)) நேற்றிரவு இரவு 12.00 மணிக்கு உறங்கப் போவதற்கு முன் உங்கள் வேண்டுகோள் நினைவுக்கு வந்தது. பகலெல்லாம் வழக்கமான ஞாயிறு போல எப்படியோ கழிந்து போனது. மறுநாள் பார்க்கலாம் என்று ஒரு பக்கம் நினைத்தாலும் திங்கட்கிழமையின் காலைகள் எப்படியிருக்கும் என்பது நாம் அறியாததா? பரண் மேல் ஒட்டடைகளுடன் செளக்கியமாக தூங்கிக் கொண்டிருந்த அட்டைப் பெட்டிகளை அவற்றின் முணுமுணுப்புகளுடன் ராத்திருடன் போல் இறக்கி வைத்தேன். எனக்கென்று பிரத்யேகமாக ஒரு ராசி உண்டு. ஏதோவொரு பாடலோ புத்தகமோ எங்கிருந்தோ நினைவுப் புதரிலிருந்து மேலெந்து வந்து நிற்கும். உடனே அதை கேட்டோ/படித்தோ ஆக வேண்டுமென்று ஒரு அரிப்பு மெல்ல எழுந்து உடலெங்கும் வியாபிக்கும். ஆனால் அந்த பாடலோ அல்லது புத்தகமோ என்னுடைய சேகரி்ப்பை எல்லாவற்றையும் தலைகீழாக கவிழ்த்துக் கொட்டி உருட்டிப் புரட்டி என்னை அலைக்கழித்த பின்புதான் கிடைக்கும். அல்லது உள்ளுக்குள் எங்கேயோ ஒளிந்து கொண்டு 'பெப்பே' காட்டி கிடைக்காமலே கூட போகக்கூடிய வாய்ப்புண்டு.
இந்த ராசி நேற்றும் அட்சரம் பிசகாமல் வேலை செய்தது. 'இந்தப் பெட்டியாக இருக்குமோ அந்தப் பெட்டியாக இருக்குமோ' என்று எல்லாவற்றையும் இறக்கி பிரித்துப் போட்டு தூசும் தும்புமாக வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தேன். அந்நேரம் பார்த்து இயற்கையின் அழைப்பிற்காக வெளியே வந்த மனைவி நான் 'பழைய புத்தகக்கடைக்காரன் பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்ததைப் போல்' அமர்ந்திருந்ததை திகைப்புடன் பார்த்தாள். நல்ல வேளையாக ஒன்றும் சொல்லவில்லை. அகாலத்தில் 'எதையாவது' குடைந்து கொண்டிருக்கும் என் பழக்கம் பற்றி அறிந்தவள்தான் என்றாலும் 'இன்று ரொம்ப முத்திப் போய்விட்டது போலிருக்கிறது' என்று நினைத்திருப்பாள். அந்நேரத்தில் உங்களை சற்று திட்டும்படி கூட ஆகிவிட்டது. (உங்களுக்கு கேட்டதா?) :-
)) ஒருவழியாக புத்தகம் கிடைத்தில் திருப்தி. மறுபடியும் எதனுடாவது கலந்து விடப் போகிறது என்று தனியாக எடுத்து வைத்தேன். 'உங்களுக்காக எவ்வளவு சிரமப்பட்டேன், பார்த்தீர்களா?' என்று உங்களை சங்கடப்படுத்தவோ குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தவோ இந்தக் கடிதம் எழுதப்படவி்ல்லை. ஒரு சிறுகதைத் தொகுதியின் உருவாக்கத்திற்கு என்னுடைய பங்கும் மிகச் சிறிய அளவில் அமையுமானால் அது எனக்கு சந்தோஷமே.
புத்தகங்களை ஒழுங்காக ரகம் பிரித்து அடுக்கி வைத்துக் கொள்ளாத என்னுடைய பொறுப்பற்ற உணர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. இப்படித் தேடியதில் சில நன்மைகளும் விளைந்தன. தேவையில்லாத சில இதழ்களை தூக்கியெறிந்தேன். மகளுக்கு இரண்டு ரஃப் நோட்டுக்கள் கிடைத்தன. (பழைய உபயோகப்படுத்தப்படாத டைரிகள்). உடனே படிக்க வேண்டும் என்று ஆவலோடு வாங்கி அந்த திருப்தியோடு மேலே போடப்பட்டு உறங்கிக் கொண்டிருந்த முக்கியமான நூல்களை கைக்கருகே வைத்துக் கொண்டேன். புத்தகங்களை தூசு போக தட்டி வைக்க முடிந்தது. எல்லா இதழ்களையும் வகையாக பிரித்து வைக்கலாம் என்று தோன்றியது. ஆனால் வழக்கமாக விழித்துக் கொண்ட சோம்பேறித்தனம் பிறகு பார்க்கலாம் என்று தலைவிரித்தாடியதில் அப்படியே எடுத்து கலவையாக தூக்கிப் போட்டு வைத்திருக்கிறேன்.
இப்படி நள்ளிரவில் புத்தகங்களை அவற்றின் நினைவலைகளோடு தேடிப் பார்த்தது ஒரு சுவாரசியமான அனுபவமாக இருந்தது. உண்மையான 'இலக்கியத் தேடல்' என்பது இதுதானோ?, :-))
தோழமையுடன். -- சுரேஷ் கண்ணன்
இவர்களின் உதவியின்றி இந்தக் கதைகள் இந்தத் தொகுப்பில் இடல்பெற்றிருக்காது.
பிறகென்ன? கதைகள் பேசட்டும் உங்கள் ஹ்ருதயங்களோடு.
ஸ்நேகத்துடன், தமயந்தி



10 comments:
வாழ்த்துகள் தமயந்தி.
வாழ்த்துகள் தமயந்தி.
nandrii kannan....
nandri rufina
வாழ்த்துக்கள் தமயந்தி!
உங்க கதைங்கள்ல ஒரு சிலதை நான் படிச்சிருக்கேன். ரசிச்சிருக்கேன். (அனேகமா அது ஆனந்தவிகடன்ல வெளியானதாத்தான் இருக்கும். குமுதத்துல நீங்க அதிகம் எழுதுன மாதிரி தெரியலை. இந்த ரெண்டுதான் நான் வாங்கிப் படிக்கிறது.) தனிப்பட்ட முறையில ஒரு சந்தேகங்க்கா! எதுக்கு ஹிருதயத்துடன், ஸ்னேகமாக அப்படீன்னெல்லாம் வலிய சமஸ்கிருத எழுத்துக்களைத் திணிக்கிறீங்க? திறமையுள்ள உங்களை மாதிரி எழுத்தாளருங்க நல்ல தமிழ்ல எழுதலாம்ல? (அக்கா! வெளிப்படையா கேட்டதுக்கு என் மேல கோவிச்சுக்கப்போறீங்க. இப்ப என் நேரமே சரியில்லை.)
உங்கள் நிழல் வலை மிக நன்றாக உள்ளது.பாராட்டுக்கள்.
உங்கள் போன் நம்பர் மிஸ் ஆகிவிட்டது.
தொடர்பு கொண்டால் மகிழ்ச்சி.
நரசிம்மன் - பத்திரிகையாளர்
சென்னை.
parattkal nalla aakkam
fantastic
மிகவும் அருமை
Post a Comment