நன்றி எஸ் ராமகிருஷ்ணன்:
>> Thursday, 20 January 2011
என் சிறுகதைத் தொகுப்பு "வாக்குமூலத்திற்கு" நான் மதிப்பும் அன்பும் வைத்திருக்கும் எஸ்.ராவின் முன்னுரை :
தனிமையோடு பேசுவது
எஸ் ராமகிருஷ்ணன்:
எஸ் ராமகிருஷ்ணன்:
இரண்டாயிர வருசக் கவிதை மரபு கொண்ட தமிழகத்தில் தான் கவிதை எழுதுகிறாள் என்று ஒரு பெண்ணின் விரல் உடைக்கபடுவது நடந்துவருகிறது. உடைத்தவர் அவளது அப்பாவோ, அம்மாவோ அல்லது கணவராகவோ இருக்ககூடும். அது அனுமதிக்கபட்ட வன்முறை. அந்த வன்முறையைப் பற்றி பொதுவெளி ஒரு போதும் கவலைப்படாது. தமயந்தியின் கதையில் அப்படியான ஒரு பெண் வருகிறாள். அவள் கவிதை எழுதியதற்காக நடுவிரல் உடைக்கப்படுகிறாள். விரல் உடைந்த பெண்ணைப் பற்றிய வரியை வாசித்த நிமிசம் மனம் நடுங்கி கதையை மூடி வைத்துவிட்டேன்.
இது யாரோ ஒருவருக்கு, ஏதோவொரு கதையில் நடந்த விசயமில்லை. நம் கண்முன்னே பலரது வீடுகளில் கதையோ, கவிதையோ எழுத விரும்பிய பெண்கள் அடைந்த பொதுத்துயரம். விரல் ஒடிக்கப்படாவிட்டால் எழுதிய காகிதங்கள் தீக்கிரையாக்கபடும், கிழித்து எறியப்படும். அல்லது எழுதுதல் ஒரு ஒழுக்ககேடு என்று வீடு சுட்டிக்காட்டிக் கொண்டேயிருக்கும். இது தான் மென்மையான பூக்களின் பெயரையும் நதியின் பெயரையும் பெண்களுக்கு சூட்டி மகிழ்விக்கும் தமிழ்குடும்பங்களின் மரபு என்பது அவமானமாகயிருக்கிறது.
ஒரு ஆண் எழுத வருவதற்கும் பெண் எழுதவருவதற்கும் இடையில் எத்தனை போராட்டங்கள். பெண் எழுத ஆசைப்படும் போது குடும்பம் மிகுந்த பதற்றமடைகிறது அதற்கு முக்கியக் காரணம் எங்கே தங்களது பலவீனங்களை, பாசாங்குகளை, வன்முறைகளை அம்பலப்படுத்திவிடுவாளோ என்பதே காரணம்.
இது யாரோ ஒருவருக்கு, ஏதோவொரு கதையில் நடந்த விசயமில்லை. நம் கண்முன்னே பலரது வீடுகளில் கதையோ, கவிதையோ எழுத விரும்பிய பெண்கள் அடைந்த பொதுத்துயரம். விரல் ஒடிக்கப்படாவிட்டால் எழுதிய காகிதங்கள் தீக்கிரையாக்கபடும், கிழித்து எறியப்படும். அல்லது எழுதுதல் ஒரு ஒழுக்ககேடு என்று வீடு சுட்டிக்காட்டிக் கொண்டேயிருக்கும். இது தான் மென்மையான பூக்களின் பெயரையும் நதியின் பெயரையும் பெண்களுக்கு சூட்டி மகிழ்விக்கும் தமிழ்குடும்பங்களின் மரபு என்பது அவமானமாகயிருக்கிறது.
ஒரு ஆண் எழுத வருவதற்கும் பெண் எழுதவருவதற்கும் இடையில் எத்தனை போராட்டங்கள். பெண் எழுத ஆசைப்படும் போது குடும்பம் மிகுந்த பதற்றமடைகிறது அதற்கு முக்கியக் காரணம் எங்கே தங்களது பலவீனங்களை, பாசாங்குகளை, வன்முறைகளை அம்பலப்படுத்திவிடுவாளோ என்பதே காரணம்.
ஆண்களுக்கு உலகம் கேளிக்கை மைதானமாகயிருக்கிறது. பெண்களுக்கோ அது வேட்டைக்காடாகயிருக்கிறது. ஒரே வீட்டில் ஒரே கூரையின் கிழே வாழ்ந்த போதும் பெண்களும் ஆண்களும் வேறுவேறு உயரங்களில், வேறு வேறு மனவிசித்திரங்களில் தான் வாழ்கிறார்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து வசிக்கிறார்கள். ஆனால் சேர்ந்து வாழ்கிறார்களா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
நேஷனல் ஷியாகிரபி சேனல் ஒன்றில் ஒரு நாள் புலிகளின் காதலைப் பற்றிய ஒரு டாகுமெண்டரி படத்தைப் பார்த்தேன். காதல் மூர்க்கம் கொண்ட ஆண்புலி பெண்ணைத் தாக்குகிறது. பெண்புலி உறுமுகிறது. ஆவேசமாக திமிறிப் பாய்கிறது. இரண்டும் மூர்க்கமாகச் சண்டையிடுகின்றன. பெண் விலகிப் போகிறது. ஆண் துரத்துகிறது. இந்தச் சண்டையின் ஊடாகவே இரண்டும் முகத்தை உரசிக் கொள்கின்றன. உடல்களில் தளர்வும் நெருக்கமும் உருவாகிறது. கட்டிக் கொண்டு உறவு கொள்கின்றன. புலிகள் சண்டையிட்டுக் கொள்வதன் வழியே தான் இணையைக் காதலிக்கின்றன என்று வர்ணனையாளர் சொல்லிக் கொண்டிருந்தார். புலிகள் மட்டுமில்லை. மனிதர்களும் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். அன்பின் மறுபக்கம் எப்போதுமே வன்முறையாகத் தானிருக்கிறது. இதைத்தான் தமயந்தியின் கதைகள் அடையாளம் காட்டுகின்றன
இந்தக் கதைகளை நினைவின் கொந்தளிப்பு என்று சொல்வேன். நினைவு அடங்க மறுக்கிறது. அது ஆற்றோர நாணல் போல காற்றின் சிறு அசைவில் கூட ஆடிக் கொண்டேயிருக்கிறது. எல்லா நினைவுகளும் இனிமையானவையில்லை. சில துர்சொப்பனங்கள் போன்றவை. ஆனாலும் அவற்றை நாம் மறக்கவிரும்புவதில்லை. மனது அந்தக் கசப்பை மறப்பதேயில்லை. நினைத்து நினைத்து உன்மத்தம் கொள்கிறது. கசப்போ, இனிப்போ நினைவுகள் தான் நமக்கு எப்போதும் சிறகுகளாகின்றன. அதன்வழியாக மட்டுமே அன்றாடச் சிடுக்குகளில் இருந்து பறந்து போகிறோம்.
தமயந்தியின் கதைகள் நாம் காணும் தினசரி வாழ்க்கையின் ஊடாகவே நடந்தேறுகிறது. அவரது கதையில் வரும் மனிதர்கள் நம்மோடு உடன் பணியாற்றுகின்றவர்கள், ஒன்றாகப் பேருந்தில், மின்சார ரயிலில் பயணம் செய்கின்றவர்கள், அடுத்த வீட்டில் குடியிருக்கின்றவர்கள். அன்பானவர்களை போலத் தோற்றம் கொண்டவர்கள். புறத்தோற்றம் ஒரு ஏமாற்று என்பதை பெண்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வெளிவேஷமிடுவதை இயல்பாக கொண்டுவிட்ட எரிச்சலை, பாசாங்கை தமயந்தியின் கதைகள் வலிமையாக வெளிப்படுத்துகின்றன.
அவரது கதாபாத்திரங்கள் தனிமையில் முழ்கிக்கிடக்கிறார்கள். அந்தத் தனிமை ஒரு தண்டனை போல அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தனிமையை அவர்கள் விரும்புவதில்லை. தன் அன்பையும் இருப்பையும் தான் நேசிப்பவர்களுக்காக கரைத்து கொள்ளவே ஆசைப்படுகிறார்கள். ஆனால் அதைப் புரிந்து கொள்ளாமல் குடும்பமும் சமூகமும் அவர்களை வெறுத்து ஒதுக்கி தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது.
தாங்கமுடியாத தனிமையைக் கடந்து செல்ல அவர்கள் தனிமையோடு பேசத்துவங்குகிறார்கள். இதில் உள்ள அத்தனை கதைகளும் தனிமையோடு பேசிய உரையாடல்கள் தான். தனிமை மௌனமாக கேட்டுக் கொண்டிருக்கிறது. அது மறுப்பதுமில்லை. ஏற்றுக் கொள்வதுமில்லை. மனத்துயரத்திலிருந்து சாந்தி கொள்ள இதைத்தவிர வேறு என்ன தான் வழியிருக்கிறது.
தான் நேசித்த கணவர், குழந்தை, குடும்பம், தன்னோடு வேலை பார்த்தவர்கள், தன்னை காதலித்தவன் என்றுவேறுவேறுகதைகளில் வேறுவேறு நினைவுகள் கிளைவிடும் போதும் அதன் ஆதாரமாக இருப்பது நிராகரிப்பின் வலியே. அந்த வலி உண்மையானது. எழுத்தில் அதே ரத்தசூட்டோடு எழுதப்பட்டிருப்பதே இதன் சிறப்பு.
சிறுவயதில் வீட்டு மொட்டை மாடியில் உள்ள கயிற்றுக்கொடியில் காயப்போட்ட ஈரச்சேலைக்குள் முகத்தை நுழைத்துக் கொண்டு அதன்வழியே உலகைப் பார்த்த அனுபவம் எனக்கிருக்கிறது. அந்த நிமிசத்தில் சேலை என்பது ஒரு மாயப்பொருள் போலாகிவிடும். அதன்வழியே காண்கையில் உலகின் நிறம் மாறிவிடுவது உற்சாகமாகயிருக்கும். அப்படி இவரது சில கதைகளில் வரும் வரிகள் தினசரிவாழ்க்கையின் கசடுகளை தாண்டி வாழ்க்கையை ஈர்ப்புடன் காட்டுகின்றன.
ஒரு கதையில் காய்ந்த இறகு படபடக்க முடியாமல் சத்தமிடுவது மாதிரி குளியலறையில் தண்ணீர் விழும் சப்தம் கேட்கிறது என்று ஒரு வரி உள்ளது. இது வெறும் வர்ணனையில்லை. ஒரு நுண்மையான அனுபவம். தன்னைச் சுற்றிய உலகின் மீது கொள்ளும் பிடிப்பு. தமயந்தியின் பலகதைகளை இந்த நுண்மை வசீகரமூட்டுகிறது.
எனக்கு இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் மிகவும் பிடித்தமான கதை இலுப்பை பூ ரகசியம். அதில் வரும் மூன்று பெண்களும், அவர்களுக்குள் ஏற்படும் பிரிவும் அவமதிப்பும், சொல்லி பகிர்ந்து கொள்ளமுடியாத தவிப்பும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக வீட்டுசாவியை கூரியரில் அனுப்பி வைக்கும் பெண்ணின் மனவிசித்திரம் அபூர்வமானது.
தமயந்தியின் குரலை நிறைய நாட்கள் பண்பலை ரேடியோவில் கேட்டிருக்கிறேன். அந்தக்குரல் மின்சாரக் கம்பியில் வந்து அமரும் குருவியின் படபடப்பிற்கு ஒப்பானது. எந்த நிமிசமும் பறப்பதற்கான எத்தனிப்பு கொண்ட சாந்தமது. அவரது குரலில் உள்ள அதே வசீகரம், தனித்துவம் கதைகளிலும் கைக்கூடியிருக்கிறது.
புத்தகம் வாங்க தொடர்புக்கு : பிஸ்மி, போதி பதிப்பகம் : 0-9444037638



13 comments:
சிறுகதைத் தொகுப்புபிற்கு வாழ்த்துகள்.
நன்றி ப்ரியன்
இனிய வாழ்த்து(க்)கள்.
எஸ்.ரா.வின் முன்னுரையால் சுவாரசியம் கூடி இருக்கு,
சென்னை வரும்போது வாங்குவேன்.
நன்றி துளசி. பிஸ்மியை தொடர்பு கொண்டால் தபால் மூலமாகவே பெறலாம்.
வாழ்த்துக்கள் தமயந்தி.. உங்களை ஆனந்த விகடனில் எனக்கு அறிமுகம்..
இண்ட்லியில் ஏன் இணைக்கவில்லை? நானே இணைச்சுட்டேன்.. ( இதுக்கு ஏதாவது புக் விலைல கன்செஷன் உண்டா?)
வாழ்த்துக்கள்
நல்லதொரு முன்னுரை!
புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள் தமயந்தி!
வாழ்த்துகள்
Congratulations!
thulasi...nandrii.and senthil, thanks for adding..l.k, kathir, gopi,chitra..pass on ur cokmments after reading the book
வாழ்த்துக்கள்
மேலும் ஒரு சிறகு எஸ் ரா அவர்களின் முன்னுரை
அதற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்.
Post a Comment